முனைவர் S. ஸ்ரீகுமார்
பேராசிரியர்,
தமிழியல் ஆய்வு மையம்,
S.D. இந்து கல்லூரி,
நாகர்கோயில்-629002
எண்ணச் சிறகுகள்.
மொழியை வசப்படுத்தும் ஒரு கலைதான் கவிதை. வாழ்வின் வறண்டுபோன உதடுகளை தன் நுனி நாக்கால் இன்னும் ஈரப்படுத்திக் கொண்டே இருப்பது கவிதை. இனிமையான கவிதைகள் பிரியம், துயரம், தேடல், ஆராதனை, கடுங்கோபம் என எல்லா அனுபவங்களையும் எளிமையான வார்த்தைகளால் பேசும். ஒரு சிறிய கருப்பொருளைக்கூட கவிதையாக்குகிற கலை வாழ்வனுபவம் வழங்கும் வரம். கவிதை பிரசவிப்பு என்பது ஒரு சுக அனுபவம் மட்டுமல்ல; அது ஒரு சௌந்தர்ய சக்தி. அதன் வீரியமும் வியாபிக்கும் திறனும் அணுவுக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றலைப் போன்றது. கவிஞர். த. மார்க்சிற்கு இது தெரிந்திருக்கிறது. கவிஞரின் முதல் அறுவடை இந்நூல்.
ஒரு படைப்பாளி இந்தச் சமூகத்தின் நாடி பிடித்துப் பார்க்கும் மருத்துவராகவும், அவர் படைப்புக்கள் இச்சமூகத்தின் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்க வேண்டும். அவலங்களால் இதயக் குமுறல்களில் உண்டாகும் புலம்பல்களாக இல்லாமல், விடுதலை வேட்கை நோக்கிடும் விடியலுக்கான குயிலின் குரல் இந்த கவிதைத் தொகுப்பு. பகுத்தறிவு பொங்கிடும் சொற்களோடு இவருடைய ‘பா’ உலகம் தொடங்குகிறது. ஒவொரு பாவிலும் சமுதாய உணர்வும், உயர்வும் முகம் காட்டி மகிழ்விக்கின்றன. எதார்த்த வாழ்வை நேசிக்கும் கவிஞர் ஆகையால், யாருமற்ற வாழ்க்கை மரணித்துவிட்ட பாம்பைப் போல் இருண்மையானதாகக் கவிஞருக்குத் தென்படுகிறது. ஒட்டுத் துணி இல்லாமல், கொட்டும் பனியில் காய்ந்த ரொட்டித் துண்டுகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு ஓடும் ஆறு வயதுச் சிறுவனைப் பார்த்து குளிருக்கு இதமாய் இரண்டு போர்வையோடு படுத்திருப்பவனின் மன அவஸ்த்தை கவிஞரின் கனிவான இதயத்தைக்காட்டும்.
இந்திய நாடு, மனிதர்களை வேட்டையாடும் கூடாரமாகிப் போனது கண்டு குமுறுகிறார். அவசர உலகில் பக்த்திகூட பாரதத்தில் பரிதவித்து நிற்கின்றது. வெள்ளைக்காரனை வென்ற மகாத்மா, சுதந்திர இந்தியாவில் இன்று தோல்வியின் அடையாளமாகக் கவிஞரின் பார்வையில் காட்சி தருகிறார்.
கவிஞரது கவிதைகளில், கவிதைக்கேற்ற வார்த்தைகள் உள்ளடக்கத்திற்கு ஏற்ப உட்கார்ந்து அழகு செய்கின்றன. அடிபட்டுக் கிடக்கும் கருநாகம், பழைய சைக்கிள் டயர்போல் சுருண்டு கிடக்கிறது எனும் வரிகளில் புதிய உவமை பளிச்சிடுகிறது. சிறிய ஓடைகள் தண்ணீரை வாங்கிக்கொள்ளும் வரை, ஆறு தன் ஓட்டத்தை நிறுத்திக் கொள்வதே இல்லை என்னும்பொழுது, கருத்தாழம் மிளிர்கிறது
இலையுதிர் காலத்தின் கடைசி இலை, மழைக்காலத்தின் முதல் துளியாக ஆட்சி மாற்றத்தை காணும்பொழுது, கவிஞரின் சமீப கால உணர்வு வெளிப்படுகிறது. கிழிந்த ஆடையிநூடாக மார்பை ரசித்துப் பார்க்கும் வந்புனர்ச்சியாளர்கள், கருவறையில் பிறந்தனரா கழிப்பறையில் பிறந்தனரா? என்ற கேள்வியை எழுப்பும்பொழுது கவிஞரின் சமூக உணர்வு துல்லியப்படுகிறது. சோறு கிடைக்காத காக்கைகூட தலைவரின் தலையில் அமர்ந்து எச்சமிட்டு கோபத்தை வெளிப்படுத்துகிறது. உழைக்காது உண்ணும் மனிதனைப் பார்த்து, உழைத்து உண்ணும் தேனீக்கள் கூடக் கோபம் கொள்கின்றன. ஆனால் மனிதன்? என்று கவிஞர் கேள்வி கேட்பது நினைக்கத்தக்கது. புரட்சியின் அடித்தளம் வெகுசனங்களின் கோபம் என்பது வரவேற்கத்தக்க வரி.
இன்றைய கவிதை உலகின் சிக்கல்களையும் சிடுக்குகளையும், எமகங்களையும் படிமங்களையும், மானுடச் சமூகத்திரலின் உள்ளார்ந்த பிளவுகளையும், நெருடல்களையும், ஏக்கங்களையும், சோகங்களையும், ஆக்கங்களையும் ஊன்றி உணர்ந்துள்ளார் கவிஞர். த. மார்க்ஸ். கபடமற்ற விழிகளால் கண்டுனர்ந்தவற்றைச் சிக்கலற்ற பொது மொழியில் சொல்ல முற்பட்டுள்ளார். மொட்டுக்குள் சிறைபட்டுக் கிடக்கும் மணம், கற்றைத் தழுவி கெளரவம் பெறுவதை யார் தடுக்க முடியும்? காற்று சங்கீதமாவதும், பேச்சு கவிதையாவதும், வண்ணங்களின் தெளிப்பு ஓவியமாவதும் சராசரித் தனத்தை மீறும் பொழுதுதான் நிகழும். போராட்டக் குணத்தோடு மீண்டும் கிளர்ந்தெழுவேன் என்று முத்தாய்ப்புக் கவிதை மூலம் சராசரித்தனத்தை மீறி எழுந்து, நிமிர்ந்து, கவிதை உலகில் வீறு நடை போட இக்கவிதை நூல் மூலம் கவிஞர் த. மார்க்ஸ் ஆயுத்தமாகிறார். கவிங்கறது கவிதைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
வாசிக்க சில கவிதைகள்:
காவியும் திரிசூலமும்
வெறுப்பை உமிழும் முகங்கள்
சோகங்கள் நிறைந்த நாட்கள்
கோபங்கள் சூழ்ந்த இரவுகள்
வன்முறையைச் சுவாசிக்கும் காற்று
அரைநிர்வாண மரக்கிளையில்
நடனமாடும் தீக்கதிர்கள்
குப்பைகள் கலந்த மண்ணில்
பொம்மைகளோடு தன்னந்தனியே
அநாதையாக்கப்பட்ட குழந்தைகள்.
எங்கும் மரண ஓலம்
சிதிலமடைந்த குடியிருப்புகள்
சிதறிப்போன நம்பிக்கைகள்
அன்னை தேசத்தில்
அன்னியர்கலாகிப்போன அப்பாவிகள்
மனிதர்களை வேட்டையாடி
மகிழும் நரபளிக் கூட்டம்
மகளிர் கற்பைச் சூரையாடிப்
புரளும் வன்புணர்ச்சிக் கூட்டம்
மதவெறியாட்டம் முடிந்தது
திரும்புகிற இடமெல்லாம்
இரங்கற்பாக்கள் மட்டுமே
கேட்பவர்கள் யாருமில்லை
வார்த்தைகள் எதுவுமில்லை
காலடி ஓசையில் எதிரொலியோடு
உரையாடிச் செல்லலாம்.
உறிஞ்சிய இரத்த நெடியில்
சிறிது இளைப்பாறுகிறார்கள்.
மீண்டும் மதவாதிகளுக்குப்
பசி எடுத்தால்
மற்றுமொரு முறை
காவியும் திரிசூலமும்
மனித வேட்டைக்கு
வலம் வரும்.
ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்
காந்தி பிறந்த வீட்டுக்குள்....
உடையாத பாட்டில்களும்
உடையும் மனிதமும்
அழுக்கான பள்ளிச்சீருடையில்
சோகம் படராத முகச் சிறுமி
தோள்களில் கோணிப்பை
தொலைந்து போன வாழ்க்கை.
காந்தம் பொருத்தப்பட்ட தடியால்
குப்பைகளைக் கிளரும் கரங்கள்
காந்தம் நோக்கி வரும் குப்பி மூடிகள்
வறுமை தேடி வரும் துயரங்கள் போல்.
குனிந்து முடிகளைப் பொறுக்கும்போது
கிழிந்த ஆடைகளி னூடாகத் தெரியும்
மார்பை ரசித்துப் பார்க்கும்
மானங்கெட்ட வன்புணர்ச்சிக் கூட்டம்.
இவர்கள் கருவறையில் பிறந்தனரா?
இல்லை கழிப்பறையில் பிறந்தனரா?
இருப்போர் ஆடை கிழிந்தால் பாவனை
வறியோர் ஆடை கிழிந்தால் வேதனை.
பெண்ணே! கிழிந்தது உன் ஆடையல்ல
சுண்ணம் பூசிய மனித முகங்களோடு
சிதிலமடைந்த ஜனநாயகமும்தான்.
முழுப் புத்தகத்தையும் வாசிக்க தொடர்பு கொள்ளலாம்: drtmarx@gmail.com