Wednesday 24 August 2011

Reliable History on Mohammed Ali Jinnah by R.S.Thangasamy

முகமது அலி ஜின்னா பற்றிய இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாற்றையும், காந்தியின் மறுபக்கத்தையும் அறிய உதவும் அரிய நூல்:
இரா. சி. தங்கசாமி எழுதிய மாமனிதர் ஜின்னா:

அணிந்துரை:
முனைவர் நா. அரணமுறுவல்
04-10-2007
உதவி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
திருநெல்வேலி மாவட்டம்.

     முகமது அலி சின்னா, பெயரைக் கேட்டதும் பாகித்தானைத் தனியே பிரித்த தலைவர் என்பதுதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
     வெள்ளை வல்லரசிடமிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும். இந்துக்களும் இகலாமியர்களும் இணைந்து போராடி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் சின்னா. இந்தியாவின் பேராயக் கட்சி மட்டும்தான் விடுதலைக்குப் போராடுகிறது என்று காந்தியும் நேருவும் திரும்பத் திரும்பக் கூறியபோது, இல்லை. முசுலிம் லீக்கும் அதற்காகத்தான் போராடுகிறது என்று அவர்களோடு வழக்காடியவர் சின்னா.
     இசுலாமியர் தலைமை இந்திய விடுதலைக்கு அமைந்துவிடக் கூடாதென்று கருதியவர்கள். இந்தியப் பேராயக்கட்சி இசுலாமியர் தலைமையில் இந்திய விடுதலையை வென்றெடுத்துவிடக்கூடாதென்று கருதியர்வர்கள் மத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்த தூண்டினார்கள். இந்துத்துவத் தலைமையில் பேராயக் கட்சி வரும் வரை காத்திருந்து நாட்டை இந்து நாடென்றும் இசுலாமியர் நாடென்றும் இரண்டாகப் பிரித்தார்கள். இந்து மத இசுலாமிய மதக் கும்பல்களிடம் மாட்டிக் கொண்ட காந்தியும், சின்னாவும் காலத்தால் அழிக்கப்பட்டார்கள். காந்தியின் இராமராச்சியம் கடைசியில் அவரது உயிரைப் பலிவாங்கியது. சின்னா பாகித்தானில் புறக்கணிக்கப்பட்டு நோயில் விழுந்து மடிந்தார். இரண்டு மதவாதக் கும்பல்களும் இரண்டு தலைமையையும் நன்கு பயன்படுத்திக் கொண்டன.
     இளமைக் காலம் தொட்டு பாகித்தானில் சின்னா இறக்கும்வரை 15 இயல்களாகப் பிரித்து இந்த நூலை வழக்கறிஞர் இரா. சி. தங்கசாமி எழுதியுள்ளார்.
     1893ஆம் ஆண்டு இலண்டன் இலிங்கன்சு இன் சட்டக்கல்லூரியில் சேர்ந்த சின்னா இலண்டனில் தாதாபாய் நவரோசி தொடங்கிய இந்தியர் சங்கத்தில் இணைந்து அவரைத் தன்வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். சாண் மார்லே எழுதிய சமரசம் என்ற நூல் சின்னாவை மிகவும் கவர்ந்தது. அவருடைய கொள்கையைச் சின்னா பின்பற்றினார். தனிமாந்த மனசாட்சி, மனசாட்சி உரிமை, அனைவருக்கும் சமஉரிமை என்பன மார்லேயின் கருத்துக்கள்.
     1897இல் வழக்கறிஞர் தொழில் செய்ய மும்பை சென்ற சின்னாவிற்கு ஐரோப்பியத் தலைவர்களுக்குக் கூட கிடைக்காத வாய்ப்பாகிய வழக்கறிஞர் நாயகம் சர் மக்பர்சன் உதவியால் சின்னா குற்றவியல் நடுவர் ஆகும் வாய்ப்பையும் பெற்றார்.
     இந்தியத் தேசிய மென்போக்கு அரசியலாருடன் கொண்ட தொடர்பால் கோகலேயின் ஊழியராகி முகலிம்லீக் வேட்பாளரைத் தேர்தலில் தோற்கடித்தார்.
     1910ஆம் ஆண்டிற்குப் பிறகு சின்னா அரசியலில் மதம் கலப்பதை விரும்பாது முகலிம் லீகை - பேராயக்கட்சியுடன் நல்லிணக்கம் கொள்ளச்செய்தார்.
     சின்னா பற்றி அண்ணல் அம்பேத்கார் சொல்கிறார்: “சிந்தனை மாற்றத்தின் காரணமாக சின்னா பிரிட்டீசாரின் கைப்பாவையாகச் செயல்பட்டார் என்று அவரது மிக மோசமான எதிரிகள் கூட ஒருபோதும் சந்தேகிக்க முடியாது. அவர் தனது சொந்தக் கருத்தில் உறுதியுடயவராக , ஒளிவுமறைவற்ற தற்பெருமை உடையவராக இருந்திருக்கலாம்... இந்தியாவில் ஊழலற்ற அரசியல்வாதி என்று ஒருவர் இருந்தால் அந்தச் சொல் அவருக்கே பொருந்தும். சின்னாவை யாரும் விலைக்கு வாங்க முடியாது. அவர் ஒருபோதும் வாய்ப்பைத் தேடிச் சென்றதில்லை என்பதே அவருக்குக் கிடைத்த பெருமையாகும். சின்னாவின் மாற்றத்திற்கான காரணத்தை இந்து மரபுவழிச் சிந்தனையாளர்கள் புரிந்துகொள்ளவில்லை.”
     இதன் பின்பே சின்னா முசுலிம் மக்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு பாகித்தனை அடைய முசுலிம் மக்களை வழிநடத்தத் தொடங்கினார்.
     முதலில் நான் ஒரு இந்து, எனவே நான் உண்மையான இந்தியன் என்றார் காந்தி.
     முதலில் நான் ஒரு இந்தியன், அதன் பிறகுதான் நான் ஒரு முசுலிம் என்றார் சின்னா.
     ஆனால் இந்து மதவாதிகளின் வளர்ச்சி, தீவிரவாதப் போக்கு ஆகியவை இந்திய நாடு பிளவுபடுவதற்கு வழிவகுத்துவிட்டன. சின்னா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியைத் தழுவின.
     1948இல்  அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிப் பேசிய சின்னா, “எக்காரணத்தைக் கொண்டும் பாகித்தான் மத குருமார்களின் அரசாக இருக்காது. நம் நாட்டில் முசுலிம்  அல்லாதவர்கலாகிய இந்துக்கள், கிருத்துவர்கள், பார்சிகள் ஆகியோரைக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அனைவரும் பாகித்தானியர். பாகித்தானில் அவர்கள் அனைவரும் மற்ற குடிமக்களைப் போல் சமப் பங்களிப்பைச் செலுத்திச் சமஉரிமையாளர்களாக விளங்குவார்கள்” என்று குறிப்பிட்டார்.
     சின்னா பற்றிய இவ்வாறான கருத்துக்களைப் பல நூல்கள் வாயிலாகத் திரட்டி இந்நூலை ஆசிரியர் திறம்பட இயற்றியுள்ளார். நூலை உருவாக்க பெரிய முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றுள்ளார். சின்னாவின் வாழ்க்கை வரலாற்றோடு சென்ற நூற்றாண்டின் இந்திய அரசியல் வரலாற்றையும் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்துள்ளார் ஆசிரியர்.
     தமிழ்நாட்டு இன்றைய சூழல் முசுலிம் மக்கள் மீது          சுமத்திவரும் பொய்க்குற்றச்சாட்டுகளை  அம்பலப்படுத்த இந்த நூல் தமிழ் மக்களுக்கு உதவும் என்பது உறுதி.

என்னுரை- இரா. சி. தங்கசாமி.

     ஒரு நாட்டில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்களை ஆதிக்க வர்க்கம் அவர்களது நலனை முன்னிறுத்தி உண்மையை  மறைத்தும், திரித்தும், திருத்தியும் எழுதி வரலாறு என்று காட்டுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சில முகாமையான தலைவர்களின் பங்களிப்பைத் திட்டமிட்டு உள்நோக்குடன் மறைத்தும், திரித்தும், திருத்தியும்  தவறான தகவல்களைத் தந்து ஒரு மாயத்தோற்றத்தையும் ஒருவித அறிவு மயக்கத்தையும் ஏற்ப்படுத்தி வருவது தொடர் செயல்பாடாக உள்ளது.
     இந்தியாவின் தலைவிதியை தீர்மானிப்பதற்கான சிக்கலான பணியில் இரண்டு மிக முக்கியமான அரசியல்வாதிகளான காந்தியும், ஜின்னாவும் ஈடுபட்டனர். அவர்கள் இருவரும் சிந்தனையில், தோற்றத்தில், கண்ணோட்டத்தில், செயல்பாடுகளில் இருவேறு துருவங்கலாகவே இருந்தனர். இந்தியச் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் முன்னோடித் தலைவர்களான தாதாபாய் நவ்ரோஜி, பெரோசா மேத்தா, கோகலே ஆகியோரது அருந்தொண்டரான ஜின்னா, சுரேந்திரநாத் பானர்ஜியின் அடிச்சுவட்டில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். முஸ்லிம் கோகலேவாகத் திகழ விரும்பிய ஜின்னா தன் வாழ்வையே இந்திய தேசிய விடுதலைக்காகவும், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் அர்ப்பணித்தார். அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் நேர்மையான, விலைபோகாத, ஊழலற்ற அரசியல்வாதி என்றும் பிரிப்டீசு இந்தியாவின் ஆளுநர் வெலிங்டன் பிரபுவால் போல்ஷ்விக் என்றும் ஆர்.ஆர். நந்தாவால் முஸ்லிம் மாஜினி என்றும் கவிக்குயில் சரோஜினி நாயிடுவாள் இந்து முஸ்லீம் தூதர் என்றும் புகழாரம் சூட்டப்பட்டார். சமூகச் சீர்திருத்தங்களுக்காகவும், மதச்சார்பின்மையாளராகவும் திகழ்ந்தார். காங்கிரசு பேராயக் கட்சியினரால் அரசியல் மோசக்காரரென்றும் இந்து வகுப்புவாதிகளால் காபிர் (நாத்திகன்), காங்கிரசு அடியாள் என்றும் தூற்றப்பட்ட அஞ்சா நெஞ்சன் ஜின்னா இந்து மகாசபை ஆதரவாளரும் கீதையின் பற்றாலருமான காந்தியின் மத அரசியலைத் தோலுரித்துக் காட்டியதுடன், அரசியல் பண்பாலர்களின் விளையாட்டு என்று தெளிவு படுத்தினார். சினாவின் சாதனைகள் அளவிடற்க்கரியவை.
     இந்தியச் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ஜின்னா ஆற்றிய பங்களிப்பை நடுநிலை நின்று நாடடு மக்களுக்கு எடுத்த்துரைக்கும் எனது முயர்ச்சியே அவரது வாழ்க்கை வரலாறாக அமைந்துவிட்டது.
இரா. சி. தங்கசாமி.

முழு புத்தகத்தையும் வாசிக்கத் தொடர்புகொள்ளவும்:

No comments:

Post a Comment